Friday, March 21, 2008

இரண்டாம் கற்காலம் !

இரண்டாம் கற்காலம் !
ஆரூர் புதியவன்


கல்லும், உளியும்
கலந்த பொழுது
கர்ப்பமான கல்
சிற்பமானது

மலையை செதுக்கத் தெரிந்த
மனிதன் தன்
மனத்தை செதுக்கத்தான்
மறந்தே போனான்


கல்லுக்குத்தான்
எத்தனை பரிணாமங்கள்
கல் கடவுளாக்கப்பட்டது
பகுத்தறிவு கடவுளைக் கல்லால் அடித்தது...
காலம் புரண்டது...
கடவுளை கல்லால் அடித்தவர்களும்
கல்லாய்த்தான் நிறுத்தப்பட்டார்கள்.

கடவுள் பக்திக்கு மட்டுமின்றி
கலவரத்திற்கும்...
கல்லே மூலமாய்...


மனிதனுக்கு
கல்லையும் கடவுளாய்ப்
பார்க்க முடிந்தது ...
மற்றவனைத்தான்
தன்போல் பாவிக்க முடியவில்லை.

உடைப்பட்ட சிலைகளுக்காய்
உருள்கின்றன தலைகள்...


ஒரு தலைவர் ஆற்றிய
சேவைகளை விட
அவருக்கு வைக்கப்படும்
சிலைகளே ...
அவர் தகுதி உரைக்கிறது...

ஒன்று மட்டும் உண்மை
மனிதன் கல்லை
சிலையாக்கினான்
சிலையோ மனிதனைக்
கல்லாக்கி விட்டது.


நகரவீதிகள் தோறும்
நகரா சிலைகள்
ஓ ... இது இரண்டாம் கற்காலம் !

இங்கே
அடிமைத்தளை நீக்க
யுத்தம் செய்பவர்களை விட
தலைவர் சிலை வைக்க
ரத்தம் சிந்துவோர் அதிகம்

சட்ட சபைகள்
நலத்திட்டங்களை விட
சிலைத்திட்டங்களே
அதிகம் அறிவிக்கின்றன

இருபத்தோராம் நூற்றாண்டின்
இனிய தமிழா ...
கணிப்பொறி யுகத்தில்
உலகம்...
நீ இன்னும்
கற்காலத்தை
கடக்காமலா?


ஒவ்வொரு சிலையும்
மலையின் தவணைமுறை சமாதி
என்பதை மறவாதே !

சிலைகளை மற
மனிதனை நினை
ஜாதிகளும், சிலைகளும்
அறிவுக்கு அமைக்கப்பட்ட
வேகத்தடைகள்
நாம் விரைந்து முன்னேற
இரண்டையும் தகர்ப்போம்...!

Thursday, March 20, 2008

ஏற்றத்தாழ்வு


உனக்கு பசிக்கும்போது
மணியாட்டினால்
எல்லாம் தானாக வரும்!
என் பசிக்கு..
வியர்வையுடன் உழைத்து
நானே சொந்தமாகத்
தேடினேன்!

நீ உச்சிக்கோபுரத்தில்
உட்கார்ந்து எம்மை
ஏளனமாகப் பார்க்கின்றாய்!
நாங்களோ
நாற்றமெடுத்த
சாக்கடை ஓடும்
பக்கத்துக் குடிசையில்!

உரிமையுணர்வை
உணர்ந்து கேள்விகள்
கேட்டால்....
சாமி கண்ணைக் குத்தும்
என்று சொல்கிறாய்!

நீ கொஞ்சம் யோசி,
ஒண்ட வந்த பிடாரி
ஊர்ப் பிடாரியைத்
துரத்த நினைப்பது
விந்தைக் கூற்று!